எனது நூல்கள்

எச்.முஜீப் ரஹ்மான் எழுதிய நூல்கள்

1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)

2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)

3) மகாகிரந்தம் (நாவல்)

4) நான் ஏன் வஹாபி அல்ல? (ஆய்வு)

5) மறுவாசிப்பு,மறுசிந்தனை,மறுவிளக்கம் (கட்டுரை)

6) தியரி (ஆய்வு)

7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை

8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)

9) வெறுமொரு சலனம் ( கவிதை)

10)பின் நவீன கவிதைகள்

11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்

12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)

13) நவீன தமிழ் அகராதி

14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )

15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)

16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)

17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)

18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)

19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)

20) சூபி நூற்களில் சூபித்துவம்( மதிப்புரை)

21) சூபி பேரகராதி

22) ஹமவோஸ்த் (ஆன்மீகம்)

23) தீர்க்கதரிசி (நாவல்)

24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)

25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல( கட்டுரை)

 

Friday March 24, 2006

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல்

அண்மையில் மதுரையில் புதியகாற்று மாதஇதழின் சார்பாக சென்னையை சார்ந்த புதுப்புனல் புத்தக

வெளியீட்டாளர்கள் எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச்சிறுகதைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டு பேசிய எம்.ஜி.சுரேஷ், ‘புனைக்கதைகள் எழுதி எழுதித் தேய்ந்து விட்டன.தேய்ந்த கத்தியை மேலும் மேலும் தேய்த்து அதன் மொண்ணைத்தன்மையை நீக்கும் முயற்சி தான் இப்போது எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

முஜீப் ரஹ்மான் தனது ‘தேவதைகளின் சொந்தக் குழந்தை ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம்,தமிழ்ப் புனைகதையை அதன் மொண்ணைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்க்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது.scan 19-9-2009 7h59m43s

காஃப்கா,ஆந்த்ரே ழீத்,கொர்த்தஸார்,ஜே.ஆர்.ஆர்.டோல்கின் என்று விரியும் இவரது வாசிப்பு, எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை தேடி அலைவதைக் காட்டுகிறது.இந்த அலைச்சலே இவரை இது போன்ற சிறுகதைகளை எழுதுவதற்க்கு உந்தி இருக்கிறது என்லாம்.

பின் நவீனத்துவ கூறுகளில் ஒன்றான ‘புதியன களைதலும்,பழையன புகுதலும் ‘ என்ற செயல்பாடு இவரது கதைகளில் சாத்தியப்பட்டிருக்கிறது.நவீன எதார்த்த சிறுகதை மரபுக்கு எதிராக பழைய கட்டு கதை மரபை இவர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.இதனால் இக்கதைகள் பிரதியின் வேட்கையை ஒத்திப் போடுகின்றன.இந்த ஒத்திப்போடுதல் இக்கதைகளை நெடுநீளாய்வுக் கதைகளாக மாற்றுகின்றன.எனவே தன்னளவில் இத்தொகுப்பு தன்னை ஒரு பின் -நவீனச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக உருமாற்றிக் கொண்டு விடுகிறது.

இத்தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.பதினாறும் பதினாறு விதமான கதைகள்.ஆனால் இவை எல்லாமே கட்டுக்கதை மரபுக்குரியவை.ஓயாமல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யதார்த்தக் கதை குவியலிலிருந்து வெளிப்படும் புழுக்கத்தையும் வெப்பத்தையும் தணிக்க வந்த கதைகளாகவே இவை எனக்குக் காட்சியளிக்கின்றன.சில கதைகளில் போர்ஹேயின் வாரிசாக முயற்சித்திருக்கும் இவர் சில கதைகளில் உம்ப்ர்டோ ஈகோவின் சீடராக மாற முயற்சித்திருக்கிறார்.scan 19-9-2009 8h0m36s

இக்கதைகள் பெருங்கதையாடல்களைத் தகர்க்கின்றன.குறுங்கதையாடல்களை விளையாட்டாக உருவாக்கிக் காட்டுகின்றன.இந்துக் கலாச்சாரம்,இஸ்லாமிய கலாச்சாரம் என்ற மையமும்,விளிம்பும் கலைக்கப்பட்டு ஒருவித பொதுமையான கலாச்சார வகைமையைக் கட்டமைத்துக் காட்டும் காரியத்தை இக்கதைகள் செய்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் ஏற்கனவே சிற்றிதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.பரிசுகள் பெற்றிருக்கின்றன என்ற விஷயம் மனதுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.இல்லாவிட்டால் இது போன்ற முயற்சிகள் அருகிவிடக்கூடும்.

கடினமான கோட்பாடுகளை வாசிப்பவர்களுக்கு கதைகள் எழுத வராது.கதை எழுதுபவர்களுக்கு கோட்பாடுகளோடு

பரிச்சயம் இருக்காது.நண்பர் முஜீப்புக்குக் கோட்பாடுகளிலும் நல்ல தேர்ச்சி இருக்கிறது.கதை எழுதுவதும் கைகூடி வந்திருக்கிறது.இது ஒரு நல்ல இணைவு.

தமிழைப் பொறுத்தவரை பின் நவீனத்துவ எழுத்துக்களின் வருகை என்பது மிகக் குறைவே.கறாராகச் சொல்வதாக இருந்தால், தமிழில் ரமேஷ்-பிரேமினுடைய மற்றும் என்னுடைய பிரதிகள் நீங்கலாக, வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பின்நவீனத்துவ பிரதிகள் என்று எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.இச்சூழலில் ஒரு நம்பிக்கையூட்டும் பின் நவீன எழுத்தாளராக முஜீப் ரஹ்மான் என் கண்களில் படுகிறார்.அவரது இத்தொகுப்பை ஒரு வெற்றி என்று என்னால்,தாராளமாகச் சொல்ல முடியும்.அவர் தொடர்ந்து இயங்கி மேலும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. ‘

அய்ம்பதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கோணங்கி,ரமேஷ்(பிரேம்),தேவேந்திர பூபதி,யவனிகாஸ்ரீராம்,ஆதவன் தீட்சண்யா,உமாமகேஷ்வரி,சி.சொக்கலிங்கம்,ஹாமிம் முஸ்தபா,நட.சிவகுமார்,ஹெச்.ஜி.ரசூல்,எம்.ஜி.சுரேஷ்,ரவிச்சந்திரன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Thursday December 13, 2007

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)

பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை, குகையை, கானகத்தை என எதையும் காணவோ அதன் நுட்பங்களை அறிந்துகொள்ளவோ விருப்பமற்று இருக்கிறார்கள். இதைவிடவும் விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ஆர்வமிருப்பவன் இலக்கிய ரசனை அற்றவன் என்ற ஒரு பொய்யான கற்பிதம் வேறு தமிழ் எழுத்தாளர்களை பீடித்திருக்கிறது.  உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, பார்த்தல்மே, பிரைமோ லெவி போன்று சரித்திரத்தை மட்டுமல்லாது விஞ்ஞானத்தையே ஒரு புனைவாக உருமாற்றும் பின்நவீன எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட காலகட்டத்தில் நொய்ந்த வார்த்தைகளால் தமிழில் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. ”

திரு எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ்ச் சூழலில் அதிகப்பக்கங்களுடன் பிரமாண்டமான நாவல்கள் வந்து கொண்டிருக்க மிகக்குறைவான பக்கங்களுடன் நாவல் இலக்கணங்களையும் வரையரைகளையும் சர்ச்சைக்கு உட்படுத்தும் விதமாக இந்நாவல் அமைந்துள்ளது.பின்னை நாவல் என்று அறியப்படுகின்ற இந்நாவல் நாவலற்ற நாவலாகவும் பயோகிராபி நூலாகவும்,ஆய்வுரை நூலாகவும் ஹிஸ்டிரியோகிராபி நூலாகவும் தன்னளவில் பல்வேறு சாத்தியங்களை கொண்டிருக்கிறது.கதைகளில் இதுவரை யாருமே நினைத்திராத உடைபடும் புனைக்கதை எனும் பிரஜைல் பிக்ஸன்(fragile fiction) உத்திமுறையாக கையாளப்பட்டிருக்கிறது.

மேற்குலகில் நாவல் மரணித்துவிட்டது என்ற விவாதத்தை தொடர்ந்து இந்த பின்னை நாவல் வந்திருப்பது மீண்டும் ஒரு நாவல் குறித்த விவாதத்திற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது.நாவலின் இலக்கணத்தையும்,விதிமுறைகளையும் சர்ச்சைக்குட்படுத்தும் இந்த நாவல் நாவல் மீதான மறுவாசிப்பினை கோருகிறது.வடிவமும்,உள்ளடக்கமும் மாத்திரம் சர்ச்சைச் செய்யப்பட்ட காலம் போய் இலக்கிய வகையினங்களை சர்ச்சைக்குட்படுத்துவது ஜான்பார்த் சொல்லுவது போல இலக்கியம் நீர்த்து போய்க்கொண்டு இருக்கிறது என்று எண்ண வழிகோலும். குறிப்பாக நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. அது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்றுசேர்ந்த முயற்சி. அதாவது ஒரு இசைக்கோர்வையை போல நாவல் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதுபோல காரண காரியங்களாகத் தொடரும் சம்பவங்களோ, நிகழ்வுகளின் வழியாக மட்டும் வளரும் கதைமுறையோ இனி அவசியமற்றது. அதற்கு மாறாக காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறது என்பதையும் காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின்மீது ஒன்று படிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிதல் நாவலின் முக்கியப் பணியாகிறது. லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அரசியல் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ நாவலின் வேலையல்ல. மாறாக அரசியலின் ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வது இங்கு நாவலின் முக்கிய பங்காகிறது. சரித்திரம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதில்தான் புனைவு வெற்றிப்பெறுகிறது எனத் தெரிவிக்கின்றன பின்நவீனத்துவ நாவல்கள். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்த சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச்செய்து புனைவின் வழியாகவே உலகை எதிர்கொள்வதுமே நம் கால நாவல்களின் பிரதானப்பாடு என்றிவை வெளிப்படுத்துகின்றன. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஜோஸ் சரமாகோ (Jose Saramago) (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), 1995ல் எழுதிய “கல் தெப்பம்” (The Stone Raft), நம் காலத்திய முக்கியமான அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி என்ற பகுதியில் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சாலையில் சிறிய கோடு போல பிளவு ஏற்படுகிறது. அன்று ஒரு நாய் அதை கண்டு ஊளையிடுகிறது. இதை பற்றிய புகாரை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விஷயம் பெரிதாக வளர்ந்தவுடன் இதை வைத்துக்கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று அதிகாரவர்க்கம் திட்டமிடுகிறது. பிரச்சனை தீரவேயில்லை. முடிவில் சாலையில் ஏற்பட்ட அந்த சிறிய பிளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பள்ளமாக விரிந்துக்கொண்டே போய் ஒரு நாள் ஒரு தெப்பம் மிதந்துப்போவது போல தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது. இப்படி பிரிந்து செல்லும் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தெப்பம் தனியே ஊர்ந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு அந்நகரின் நிர்வாகத்திலும் தனிநபர்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தும் விளைவுகளும் பிரிந்துசெல்லும் தெப்பத்திலுள்ள கதாபாத்திரங்களின் மனோநிலையும் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு தேசம் ஏதாவது ஒரு காரணத்தினால் துண்டிக்கப்பட்டு பிரிந்துபோகும் அபாயங்களின் பின்னணியில் இது போன்ற வேதனைகளும் வன்முறைகளும் உள்ளன என்று முன்னும் பின்னுமாக ஊடாடி நகர்கிறது நாவல்.

நேர்முகம் ஒன்றில் “சரமாகோ” இந்த நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் “ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே உள்ளன. இருப்பினும் கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு வழியாக இரண்டாக பிளவுப்பட்டு வருகின்றன. உண்மையில் ஐரோப்பா கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியின் வழியாக பிளவுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் அவர்களின் அதிகார அரசியலும்தான்” என்கிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக பலமுறை சிபாரிசு செய்யப்பட்டவரும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளர் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுபவருமான “மிலோராட் பாவிக்” பெல்கிரேடில் வசித்து வருகிறார். அவரது “கசார்களின் அகராதி” (Dictionary of the Khazars) என்ற நாவல் ஆண் பதிப்பு, பெண் பதிப்பு (male edition, female edition) என்று இரண்டு விதங்களில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வேறுபாடு ஒரேயொரு பத்தி மட்டுமே. அதாவது பதினேழு வரிகள் மட்டுமே.

இந்த நாவல் அகராதியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அகராதி கசார்கள் என்ற இனக்குழுவின் அறிவுத்திரட்டு போல புனையப்பட்டிருக்கிறது. மரபான அகராதியின் வடிவத்தில் இது எழுதப்பட்டிருப்பதால் எங்கிருந்தும் வாசிக்கும் சுதந்திரம் இந்த நாவலுக்கு ஏற்படுகிறது.

கசார்கள் என்ற இனக்குழு கருங்கடலுக்கு வடக்கேயுள்ள வோல்கா டெல்டா பிரதேசத்தில் வாழ்ந்த இனக்குழுவாகும். இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை வலிமையான அரசாட்சி புரிந்து வந்தனர். கசார்களின் அரசனொருவன் தான் கண்ட கனவிற்கு பலன் சொல்வதற்காக தனது தேசத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களை சேர்ந்தவரகளையும் அழைக்கிறான். அதன்படி யூதமதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற மூன்று மதப்பிரிவுகளின் பிரமுகர்களும் அரசனின் கனவை விளக்க முயற்சிக்கிறார்கள். மூவரில் எவருடைய விளக்கம் தன்னை திருப்தி செய்கிறதோ அவருடைய மதத்தை தனது தேசமே தழுவ செய்வதாக அந்த அரசன் அறிவிக்கிறான். இந்த சிறிய புனைக்கதையினை துவக்கமாகக் கொண்டு இந்நாவல் கசார்களின் வாழ்க்கை எப்படி மூன்றுவிதமான அறிவு முறையைக் கொண்டுள்ளது என்பதை தனித்தனி தொகுதிகளில் விவரிக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி “பாவிக்” குறிப்பிடுகையில் “எனது எழுத்து கட்டிடக் கலையும், ஓவியமும் ஒன்று சேர்ந்த இசைக்கோலம்” என்கிறார். நம்முடைய நாட்டார் கதைகளைப் போன்ற விந்தையான கதைப்போக்கும், கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைக் கற்பனையும், சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்வதும் இந்த நாவலின் தனித்துவமான அம்சங்களாகக் கொள்ளலாம். ஆக இந்த முன்னுரையில் இருந்து கொண்டு பின்னை நாவலுக்கு செல்லுவது வாசகர்களின் மனத்தடங்கல்களை மாற்றுவதாக அமையும்.

படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் தன்னை இருத்திக்கொள்ள விழையும் சிறந்த வாசகன், ஒரு படைப்பு மேதையின் புத்தகத்தைத் தன் இதயத்தால் வாசிப்பதில்லை. மூளையால் கூட பெரிதும் வாசிப்பதில்லை. மாறாக, தன் முதுகுத்தண்டின் மூலமே வாசிக்கிறான்.

– விளாதிமிர் நொபொகோவ்

@@@@@@


A POST NOVEL

வெளியீடு:புதுப்புனல்;சென்னை

விலை:ரூ 45/-

பக்: 96

Friday April 14, 2006

அண்மையில் நாகர்கோவிலில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சார்பாக எச்.முஜீப் ரஹ்மானின் ‘தேவதைகளின் சொந்தக் குழந்தை ‘ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சன கூட்டம் நடைப்பெற்றது.விமர்சன கூட்டத்தில் சி.சொக்கலிங்கம்,அசன் மைதீன்,நட.சிவகுமார்,விஜயகுமார்,யூசுப்,கலைவாணன்,ஹெச்,ஜி.ரசூல்,சிவராமன் உள்ளிட்ட பலர் விமர்சனங்களையும்,விவாதங்களையும் முன்வைத்தனர்,

சி.சொக்கலிங்கம்

மாநிலச்செயலாளர்

“தமிழ்ச்சுழலில் பின்நவீனத்துவம் சார்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் பரவலாக கவனத்தைப்பெற்று வரும் சூழலில் இக்கதைத்தொகுப்பு புதிய பரிணாமங்களை வழங்கியுள்ளது.நாம் மேஜிகல் ரியலிசம் பற்றி அதிகம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்,மேஜிகல் ரியலிசம் உலக வரைபடத்தில் நிகழ காரணமான விஷங்கள் என்ன என்று பார்க்க வேண்டியிருக்கிறது.எதார்த்தவாத கலையிலக்கிய மரபு பெரும்செல்வாக்கை செலுத்திய போதும் அதன் ஒற்றை அர்த்த நிலைபாடும் பன்முக எதார்த்தங்களை சுட்டிக்காட்டாத விதமும் நவீனத்துவத்தின் தாக்கம் உளவியல் எதார்த்தமாக சர்ரியலிசமாக,இருத்தலியல் வாதமாக ஒலித்த போது முன்வைக்கப்பட்டது.நவீனத்துவம் ஒருகாலச்சூழலாக உருவாகிய போது ரஷ்யாவில் சோசலிச எதார்த்தவாதம் தலைதூக்கியது.அப்போது பிரான்ஸ் ராஹ் என்பவர் 1920களில்

போஸ்ட் எக்ஸ்பிரசனிச ஓவியங்களாக மேஜிகல் ரியலிசம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மேஜிகல் ரியலிசம் புழக்கத்துக்கு வந்தது.லத்தீன் அமெரிக்கச் சூழலில் அமெரிக்க எகாதிபத்தியத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டது.இன்று உலகமுழுவதும் பின்நவீன கலையுத்தியாக திகழ்ந்து கொண்டிருக்கும் மேஜிகல் ரியலிசம் தமிழில் தொண்ணூறுகளில் வந்தது.மேஜிகல் ரியலிசத்துக்கும் பாண்டசிக்கும் இடையே பாரதூரமான உறவே காணக்கிடக்கிறது.

60712138a

இந்தியசூழலில் ஜாதியகட்டுமானம் கொண்ட சமூகத்தில் விக்கிரமாதித்தியன் கதைகள் போன்று நிறைய காணக்கிடக்கிறது.மேலும் வாய்மொழி கதைமரபுகளும் நிறைய இருக்கிறது.இன்று பின்காலனித்துவம் பேசும் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் பேணபடவேண்டும் என்ற குரல் ஒலிக்கையில் மரபுகள் எனும் சொல்லாடலின் உள்கட்டுமானங்களையும் நாம் கணக்கிலெடுக்கவேண்டும்.நமக்கான மரபுகள் எது,தொன்மங்கள் எது,நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் மீது சரியான அணுகு முறையுடன் பார்க்காவிடில் ஜாதியமரபுகளை நாம் ஏற்றுக்கொண்டதாக மாறிவிடக்கூடும்.நமது சூழலில் நவீனத்துவம் கூட மதநீக்கம் செய்யப்படாமல் மதத்தோடு தான் பயணித்தது.இந்த தொகுப்பை பொறுத்தவரையில் தமிழில் முக்கியமானதாகவே படுகிறது.பின் நவீனத்துவம் படைப்புரீதியாக சரியாக உருவாகியுள்ளதா என்பதை பார்க்கும் போது இந்த கதைகள் மிகவலுவாக இருக்கிறது.பழையன புகுதலும் புதியன கழிதலும் என்பதில் என்க்கு உடன்பாடில்லை.ஆனால் கதைகளில் சொல்லபடும் மேஜிகல் ரியலிசத்தை நான் பழையதாக பார்க்கவில்லை.இது முற்றிலுமாக புதியது.கதைகளைப் பொறுத்தவரையில் உப்பாவைச் சொல்லும் கலை மரபான கதைகளுக்கு எதிரான தளத்தில் இயங்குகிறது.இந்த கதையில் சொல்லப்படும் உப்பா யார் என்ற விவாதமே கடைசியில் வாசகனிடம் உருவாகிறது.பன்முக வாசிப்பில் மாத்திரமே இந்த கதையை புரிந்து கொள்ள இயலும்.மிகவும் வித்தியாசமான இந்த கதையில் கடைசிவரை உப்பாவை சொல்லவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.அதைத்தொடர்ந்து கனவை வரைந்து பார்க்கும் கனவியல்வாதி மேஜிகல் ரியலிச வகைப்பட்டதாகும்.இக்கதைகளில் நிலதோற்றங்களும்,நம்பகதன்மையும் இல்லாமல் சித்தரிப்புகளின் வாயிலாக ஒரு உலகை பார்ப்பதுபோல இருக்கிறது.புனைவு தர்க்கங்கள் மீறப்பட்டுள்ளன என்று சொல்லமுடியும்.இக்கதைகளின் தன்மைகள் பொதுவாக அறிவாதார மூலங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனமாக இருக்கிறது.”

முக்கிய குவிமையங்கள்:

ஃ மேஜிகல் ரியலிசத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

ஃ இந்தியகதைமரபுகளின் அரசியல்

ஃ இந்திய நவீனத்துவத்தின் செயல்பாடுகள்

ஃ தமிழில் பின்நவீனத்துவம்

ஃ கதைகள் பற்றிய விரிவான பார்வை

விவாதமையங்கள்:

ஃ மேஜிகல் ரியலிசத்துக்கும் பாண்டசிகுமான வேறுபாடுகள்

ஃ மெட்டாபிக்சனுக்கும் ஸ்பெகுலெட்டிவ் பிக்சனுக்குமான வேறுபாடுகள்

ஃ போர்ஹே,இடலோ கால்வினோ படைப்புகளின் குணங்கள்

பதிவுகள்:

10 கதைகள் பற்றிய மரபான விமர்சனமுறையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தபோதும் விமர்சன பார்வை மரபான அணுகுமுறையிலேயே அமைந்திருந்தது.

20 தகவல்கள் பிரயோஜனமாக இருந்தது.இன்னும் அதிகமாக கதைகள் பற்றி விவாதிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்

படைப்பிலக்கியம் மற்றும் இஸ்லாமிய ஆய்வாளர்.

தமிழ் சூழலில் ஊடிழைப்பிரதி,பிரதியின் இன்பம்,வாசக தனம் வேறுபாடான கண்ணோட்டத்துடன் தொழிற்ப்பட்டிருக்கிறது.அது போல பழமையின் பூரிப்பு என்பதும் சரியாக உருவாகவில்லை.பின்நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களில் நாம் தொடர்ந்து இவைப் பற்றி விதாதித்த போதும் படைப்புகளில் சரிவர உருவாகவில்லை.அதி எதார்த்தம் கூட பேசுகிறோம்.பயனீட்டு மதிப்பையும்,பரிவர்த்தனை மதிப்பையும் தாண்டி குறியீட்டு மதிப்பு எப்போது உருவானதோ அதுவே அதி எதார்த்தம் எனப்படும்.மீபிரதி படைப்புகள் வாசக ஊடாட்டத்துடன் புதிய தளத்தில் உருவாகியுள்ளது.வாசகனை இன்னொரு உலகுக்கு கொண்டு செல்லும் மாஜிகலும்,பாண்டசியும் கூட மரபான இலக்கிய வடிவங்களிலிருந்து புதுவகை இலக்கிய படைப்புக்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்பவைகளுக்கு அத்தாட்சியாக இருக்கிறது.நவீனத்துவம் தமிழில் உருவ ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் தனிமனிதனுக்கு முக்கியத்துவத்தை அளித்தது.ஆனால் பின்நவீனத்துவமும் சரி பின்காலனியமும் சரி விளிம்புகளை கவனத்தில் கொள்கிறது.அப்போது படைப்பின் குணங்களும் மாறத்தொடங்கியது.முஜீப்பின் இத்தொகுப்பை பார்கிற போது மரண ஓலங்கள்,அழுகைகள்,கொடூரங்கள்,வன்முறைகள்,கதறல்கள் ஆகியவை திருப்பி திருப்பி எதிரொலிக்கிறது.சாதாரணமாக மாஜிகலிலும்,பாண்டசியிலும் சொல்லப்பட்டிருந்தாலும் மனித உணர்வுகளை கசக்கி பிளியும் கதைகளே நிறைய இருக்கிறது.அதீததமான புனைவை நாம் மனிதவாழ்க்கையின் பல்வேறு நெருக்கடிகளை இன்னொரு புனைவின் மூலம் போர்த்தும் போது ஜீவமரண போராட்டங்களே இதன் குணமாக மாறும் புனைவின் வினோத குணம் மொழியின் தன்மை வாசகனை மெல்ல மெல்ல எதர்த்தத்தை புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.நமது தொன்மங்களாகட்டும்,பழங்கதைகள் ஆகட்டும்.தேவதை கதையாகட்டும் எல்லாமே வலுவான எதார்த்தச் சூழலைக் கொண்டிருக்கிறது.இஸ்லாமிய மரபுகள் சார்ந்த ஆயிரத்தொரு அராபிய இரவுகளும்,சிந்து பாத் கதைகளு,அலிபாபா கதைகளும் மனித வாழ்வின் இருப்புக்கும்,மரணத்துக்குமான போராட்டமாக இருப்பதை காணலாம்.

இந்த கதை தொகுப்பில் சதுரங்க ஆட்டத்தில் அதிரும் மகோனதங்கள் என்ற கதை இருக்கிறது.சதுரங்க ஆட்டத்தில் தலைமூளையை பந்தயம் வைத்து விளையாடி,தோற்ற ஒருவன் மரணத்தினை ஒப்பு கொடுக்க வந்து கடைசியாக ஒருமுறை கூட விளையாடி தனது மரணத்தை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து முடிவில் மரணத்தை ஜெயித்து விடுகிறான்.கதையுலகம் கற்பனையின் சாத்தியங்களை தீவிரமாக சொல்லி நிஜத்தை பாதுகாக்கிறது.மேலும்,தொகுப்பில் உப்பாவை சொல்லும் கலை என்பது பகடி செய்தலை முன்னிறுத்தி திராவிட அரசியலை அல்லது இஸ்லாமிய அரசியலை பேசுகிறது என்று சொல்லமுடியும்.இஸ்லாமிய கதைமரபுகள் இக்கதைகளில் ஊடிழைப்பிரதிகளாக மாறியிருக்கிறது என்பதை சொல்லமுடியும்.

முக்கிய குவிமையங்கள்:

ஃ பின்நவீன படைப்புச் சிக்கலகள்

ஃ அதி எதார்த்தம்,மீபிரதி படைப்புகள்

ஃ படைப்பின் குவிமையம் ஜீவ மரண போராட்டங்களே

ஃ இஸ்லாமிய கதை மரபுகள்

ஃ மரணத்தை ஒத்திபோடும் கதைகள்

விவாதமையங்கள்:

ஃ படைப்புக்கும் கோட்பாட்டுக்குமான சிக்கல்கள்

ஃ நவீன கதைக்கும் பின்நவீன கதைக்குமான வித்தியாசங்கள்

ஃ படைப்பில் மெட்டபர்,படிமம்,குறி,குறியீடு,குறிப்பான் செயல்படும் விதங்கள்

பதிவுகள்:

10 பன்முகத்தன்மை என்பதற்காக மரபு சார்ந்த ஆதிக்க வடிவங்களை பின்பற்றுவது கூட அராஜகமே

20 விமர்சன அராஜகம் மூலம் படைபினை சிதைத்தல் ஏற்புடையதன்று

சிவராமன்

தலித்திய சிந்தனையாளர்

நமது மரபுகளை ஏற்று கதைச்சொல்லும் போது ஆதிக்க கருத்தியலுக்கு மாறான மரபுகளை சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதேசமயம் மாஜிகல் ரியலிசம் நமது மரபில் ஆதிக்க கருத்தியலுக்காக பயன்பட்டிருந்தது.பின் நவீனத்துவமும் தலித்தியமும் ஒரே காலத்தில் பயணித்தன என்றாலும் இரண்டுமே வெவ்வேறானவை.படைப்பு வேறு படைப்பாளி வேறு என்று பின்நவீனத்துவம் சொல்லுகிறது,ஆனால் தலித் படைப்பை தலித் தான் படைக்கமுடியுமென்றும் தலித் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தலித்தியம்.இந்த சூழலில் பின்நவீனத்துவமும்,தலித்தியமும் இதுவரை உருவாக்கி வைத்திருந்த அத்தனை மதிப்பீடுகளையும் உடைத்தெறிந்தது,பின்நவீனத்துக்கும் வாழ்க்கையனுபவத்துக்கும் உள்ள வேறுபாடை தலித்தியம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் வாழ்க்கையனுபம் இல்லாமல் படைப்பு நிகழமுடியாது.முஜீப்பினுடைய இந்த தொகுப்பை பார்கிற போது இரண்டுவிதமான கருத்துக்கள் உள்ளன.முதலாவதாக இஸ்லாமிய மரபுகள் சார்ந்த கதைகள் தமிழ்சூழலில் புதுவகை அர்த்தங்களை உருவாக்கவல்லது.இரண்டாவது மற்ற பொதுவான கதைகள் பின்நவீனத்துவ கோட்பாடுக்கு வலுசெய்யும் விதமாக உருவாக்கப்பட்டவை.எனவே இவை விமர்சன பூர்வமாக தான பரிசீலிக்க இயலும்.உண்மைக்கும் கற்பனைக்குமான வித்தியாசங்களை நாம் அவ்வகையில் தான் பார்க்கவேண்டியிருக்கிறது.சிறுவர்கள் படிக்கும் அம்புலிமாமா கதைகளில் வாழ்க்கையனுபவம் இல்லை.அதே போல உருவாகியிருக்கும் பல கதைகளில் எனக்கு உடன்பாடே இல்லை.

தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவ படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்டாலும் அவற்றில் எதார்த்தத்தை மறுதலிக்கும் போக்கே பிதானமாக இருக்கிறது.எதார்த்தத்தை மறுதலித்துக்கொண்டு நாம் சாதிக்க போவது என்ன ? நமது ஜாதிய முரண்பாடுகளில் இருக்கும் சமூகத்தை மாற்றியமைக்க இவ்வகை கதைகள் என்ன பங்கு வகிக்கிறது ?

என்ற கேட்விகளை விவாதத்துக்காக வைக்கிறேன்.

விவாதம் ஒன்று:

அசன்:- சிவராமனின் கருத்துக்கள் இக்கால சூழலில் ஏற்புடையதன்று.காரணம் படைப்பனுபமும் சரி படைப்பாளியும் சரி போராட்ட குணம் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது வறட்டு சோசலிச எதார்த்த வாதமாகும்.

விவாதம் இரண்டு:

யூசுப்:- பின் நவீனத்துவமும் சரி பின் நவீன படைப்புகளுக் சரி வாசகர்கள் மீது சொல்லப்படாத அதிகாரத்தைத் திணிக்கிறது.எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்

விவாதம் மூன்று:

சி.சொக்கலிங்கம்:-எதார்த்தம் என்பது ஒன்றல்ல.பல இருக்கிறது.இந்த படைப்புகளில் எதார்தம் இல்லை என்று சொல்லமுடியாது.ஆனால் எதார்த்தம் சொல்லப்பட்ட முறைதான் மாறியிருக்கிறது.

விவாதம் நான்கு:

ஹெச்.ஜி.ரசூல்:- சிவராமனது கருத்து சிவரானது கருத்தேயன்றி தலித்திய கருத்து அல்ல.அர்ஜின் டாங்கிளே,சித்தலிங்கையா போன்ற அறிஞர்கள் பின் நவீனத்துவத்துக்கும் தலித்தியத்திற்குமான உரையாடல்களை திறந்தமனதோடு விரும்புகிறார்கள்.தமிழில் அவ்வாறு இருக்க வில்லை.எதார்த்தம் என்பதன் அளவுகோல் என்ன ? என்பதை நாம் விவாதிக்க வேண்டும்.

விவாதம் ஜந்து:

விஜயகுமார்:- குழந்தைகள் பார்கிற படிக்கிற விஷங்கள் யாவும் பெரியவராலும் விரும்பபடுகிறது.குழந்தைகள் கதைகளை கதைகளாக தான் பார்கிறது.அது போல பெரியவர்கள் இருந்து விட முடியுமா ?

சிவராமனது பதில்:

நமது கதைச்சொல்லும் மரபு வெறுமனே மனமகிழ்சிக்குதான் என்றிருக்கிறது.ஆனால் கதைகள் அவற்றை தாண்டி சமூகத்தை காட்டுவதாக எதார்த்தத்தை காட்டுவதாக இருக்கிறது.எதார்த்தம் எனும் போது பிரதிபலித்தலை அல்ல குறைந்த பட்சம் வாழ்வோடு சம்பந்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது அளவுகோலாக இருக்கிறது.கலை கலைக்காக தான் என்பது ஆதிக்க வாதிகளின் குரலேயன்றி வேறல்ல.

பதிவுகள்:

10 சிறுகதைகள் பற்றி விமர்சிக்காமல் வேறேதல்லாமோ விவாதிக்கப்பட்டிருக்கிறது.விவாதங்களும் அவரவர் கருத்தை நியாயப்படுத்தும் விதமாக இருந்தது.

20 மீண்டும் மீண்டும் நாம் இலக்கிய உலகில் சர்ச்சை செய்யும் விஷயங்களாக இருக்கிறதே அன்றி புதுமையாக ஒன்றுமில்லை.

கவிஞர் நட.சிவகுமார்.

தலித்திய எழுத்தாளர்

முஜீப் ரஹ்மானின் சிறுகதை தொகுப்பை வாசிக்கிற போது கிடைத்த அனுபவம் எச்பிஓ சானலை பார்பதற்க்கு ஒப்பானது.சிறந்த கதைகள் என்பவை பொதுவாக படைப்பனுபவத்தை வாசக அனுபவமாக மாற்ற வேண்டும்.அந்த விததில் இக்கதைகள் வெற்றிப்பெற்றுள்ளது.உதாரணமாக நான் ஒரு பறவை மனிதன் கதையானது இஸ்லாமிய நம்பிக்கைகளையும்,அனுபவங்களையும் கொண்டிருக்கிறது.இஸ்லாம் சார்ந்த விஷயங்கள் எதார்த்தமானவை தானே.கதையில் கதைச்சொல்லி பறவையாக உருமாறும் போது எதார்த்தமும் உருமாறி விடுகிறது.காப்காவின் கதாநாயகன் உருமாறுவானே அது போல.இந்த கதை காலங்களை குலைத்து போடுவதினூடாக கதையை நகர்த்திக்கொண்டே இருக்கிறது.கதையில் வருகிற சூபியும்,வினோத நூலும் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த உரையாடல்களை சொல்லுவதாக அமைகிறது.முஜீப்பினுடைய கதைகளுக்கு வலுவான தளம் இருக்கிறது.புனைவுகள்,தத்துவம்,கோட்பாடுகள்,மரபுகள்,வரலாறுகள்,விமர்சன நோக்குகள் போன்ற பல்வேறு பிண்ணனிகளே இப்படி எழுதப்பட்டிருக்கிறது.தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாந்திரீக எதார்த்த கதைகளில் முஜீபின் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.இக்கதைகளை எழுதுவதற்க்கு பின்னாலுள்ள முயற்சிகளை நாம் பார்க்கும் போது மட்டுமே இதன் பலம் புரியகூடும்.பின்நவீனத்துவம் சார்ந்து எழுதுகிற மேலைநாட்டு கதைகளில் போர்ஹே,கால்வினோ போன்றோர்களின் தாக்கத்தை நாம் இப்படைப்புகளில் காண முடியும்.

உப்பாவைச் சொல்லும் கலை காலச்சுவடில் முதன் முதலாக பிரசுரம் ஆன போது தமிழ்ச்சுழலில் கடந்த பத்துவருடங்களில் வந்த சிறந்த கதைகளில் ஒன்றாக விமர்சிக்கப்பட்டது.அந்த கதையிலிருந்து ஒவ்வொருகதையும் அதனதன் தனித்துவத்துடன் இருப்பதை நாம் காணமுடியும்.சூரியன் உதிக்கும் திசை மேற்கு கதை வந்த போது தமிழில் மிகச்சிறந்த கதையாசிரியர்களில் ஒருவராக மாறியிருப்பதை பலரும் சொன்னதை கேட்டிருக்கிறேன்.இந்த புகழுக்கு காரணமான உழைப்பை நாம் கண்டும் காணாமலும் விடமுடியாது.அதுபோல சமூக பிரக்ஞையுள்ள கதைகளாக இவை இருப்பதை காணலாம்.பின்லேடன் விவகாரம்,தடாசட்டம்,பலியிடுதல் தடைச்சட்டம்,அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு,தலித்திய ஆதரவு,வரலாற்று எழுத்தின் அரசியல்,இஸ்லாமிய முரண்பாடுகள்,பாலின பேத எதிர்ப்பு போன்ற பல்வேறு விஷயங்களும் கதைகளாக மாறியிருக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள பின்நவீனசிறுகதைகளிலேயே சிறந்த கதைகளாக இவையிருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும்.

முக்கிய குவிமையங்கள்:

கதையனுபவம் வாசகஅனுபவமாக மாறவேண்டும்

இஸ்லாமிய வாழ்க்கை என்பதும் எதார்த்தமே

கதைக்கான பின்னணியும்,உழைப்பையும் கவனபடுத்தவேண்டும்

சமகால சமூக பிரக்ஞைமிக்க கதைகள்

விவாதமையங்கள்:

படைப்பனுபவம் வாழ்க்கையனுபமா இல்லையா

சமூக பிரக்ஞை முக்கியமா அல்லது காலத்தை கடந்த கேள்விகள் முக்கியமா

படைப்பில் கோட்பாட்டின் தாக்கம் முக்கியமானதாக இருக்காதா

பதிவுகள்:

10 கதைகளை விமர்சன பூர்வமாக அணுகாத குறை இருக்கிறது.

20 விமர்சன அளவீடுகள்,மதிப்பீடுகள் படைப்பளியை முக்கியத்துவ படுத்துவது இன்றைய காலத்துக்கு பொருத்தமானதல்ல.படைப்பு வெற்றியடைந்துள்ளதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

குளச்சல் மு.யூசுப்

மொழிபெயர்ப்பாளர்

முஜீப் ரஹ்மானின் கதைகளும் சரி,பின்நவீனத்துவமும் சரி மொழிவிளையாட்டை பிராதான

படுத்துகிறது.இலக்கியம் ஒருபோதும் மொழிவிளையாட்டாக மாற சாத்தியமே இல்லை.பின் நவீனத்துவம்,மேஜிகல் ரியலிசம் போன்ற கருத்துக்கள் ஏகாதிபத்திய சிந்தனைகளாகும்.இதன் மூலம் மற்றவர்களின் இருப்பை குலைத்துவிடலாம் என்று எண்ணுகிறது.இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் விதமாக எழுதப்பட்ட கதைகள் ஆபத்து நிரம்பியவை என்று மட்டுமே சொல்லமுடியும்.

விஜயகுமார்

விமர்சகர்

ஒரு கதையை வாசிக்கும் போது ஏதாவது வகையில் மனதுக்குள் ஒரு நெருடல் தோன்றுமேயானால் அந்த கதை நல்ல கதைதான்.முஜீப் ரஹ்மானின் கதை மொழி இலகுவாக தான் இருக்கிறது.ஆனால் சரியாக எதை சொல்ல வருகிறார் என்ற குழப்பமே ஒவ்வொருதடவையும் வருகிறது.இதைச் சொல்லுகிறாரோ அல்லது அதை சொல்லுகிறாரா என்ற அனுமானத்தை வைத்து கொண்டு சொல்லுவது சரியான முறையாகாது.

கலைவாணன்

எழுத்தாளர்

முஜீப் ரஹ்மானின் மொழி இடுகுறி தன்மை வாய்ந்தது.எதை சொன்னால் நன்றாக இருக்கும் என்ற தேர்வு அவரிடம் வலுவாக உள்ளது.அவரது மொழியும்,புனைவும் திறந்த தன்மைகொண்டதினால் முற்றான முடிவாக இதைத்தான் சொல்ல வருகிறார் என்று சொல்ல முடியவில்லை.மற்றபடி கதைகள் வாசிப்பதற்க்கு நல்ல அனுபவமாக இருக்கிறது.

அசன் மைதீன்

எழுத்தாளர்

இங்கே முன்வைக்க பட்ட விமர்சனங்கள் யாவும் அர்த்தம் பற்றிய விஷயத்திலேயே அதிகம் கவனம் கொண்டது.ஆனால் ஒரு படைப்பில் விமர்சன தகுதியுடைய விஷயங்கள் நிறைய இருக்கிறது.இக்கதைகளைப்பொறுத்தவரையில் விளையாட்டு, வாய்ப்பு, விதிமீறல்,

காலியாகுதல்,மெளனம், process, performance, participation, deconstruction,

antithesis, absence, dispersal, text, intertext, rhetoric, syntagm, parataxis, metonymy, surface, combination, against interpretation, misreading,

signifier,scriptable, anti-narrative, petite histoire, idiolect, polymorphous போன்ற விஷங்களில் இருந்தே அவரது கதைகள் உருக்கொள்ளுகிறது.பின் நவீன கதைகள் என்று சொல்லிக்கொள்ள இக்கதைகளுக்கு அருகதை இருக்கிறது.

பொது நிகழ்வு:

ஒரு இலக்கிய கோட்பாடின் படி இலக்கியம் படைக்க இயலுமா என்று பொதுவான கேள்வி முன்வைக்கப்பட்டது.அதற்கு விளக்கமளித்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், கோட்பாட்டின் படி எந்த எழுத்தாளர்களும் எழுதுவதில்லை.ஆனால் கோட்பாடின்றி இதுவரை எந்த எழுத்தாளரும் இலக்கியம் படைத்ததில்லை.இலக்கியம் தன்னளவில் ஒரு இலக்கிய கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது.இவ்விலக்கியக் கோட்பாடு இலக்கியத்திலிருந்து தான் செயல்படுகிறது என்று சொன்ன நியால் லூசி என்ற மேற்கத்திய விமர்சகரின் வார்த்தைகள் முக்கியமானது என்று பதிலளித்தார்.அதை தொடர்ந்து புரியாமல் எழுதுவது தான் இலக்கியமா என்ற கேள்வி எழுப்பபட்டது.அதற்கு பதிலளித்த ஆய்வாளர் சி.சொக்கலிங்கம் ஒரு இலக்கிய படைப்பு என்பது ஒரு மனநிலை அந்த மனநிலையை வாசக அனுபவமாக மாற்றுவது தான் எழுத்தாளரின் வேலையாகும்.ஒரு கலையனுபவம் விசேஷ குணங்களை பெற்றிருக்கும் போது அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாசகருக்கு இல்லாமல் போனால் புரியாமல் இருந்துவிடுகிறது.கடைசியில் இது பற்றி விளக்கமளிக்க வந்த கவிஞர் நட.சிவகுமார்,மாடர்ன் ஆர்ட் நம்மில் பலருக்கு புரிவதில்லை.இருந்தாலும் நாம் அதை ரசிக்கிறோம்.ரசிக்கின்ற போது நாம் ரசிப்பதற்க்கான காரணம் எது என்று யோசிக்கும் போது அது என்னவென்று புரிந்துவிடுகிறது.எனவே நல்ல ரசனையுடையவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.மற்றவர்கள் புரிகிறபோது ரசிக்கிறார்கள்.தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)

@@@@@@@

மகாகிரந்தம் தமிழின் அசல் மைக்ரோ நாவல்

முனைவர் பி.முருகன்

ஜெயமோகன் நாவல் பற்றிய விவாதத்தில் இப்படி தொடங்குகிறார் தொன்மையான பெருநாவல்கள் அனைத்துமே ஒரு பொதுத்தன்மை கொண்டிருக்கின்றன. இவை ஒருவகை நிகர் வரலாறுகள். மைய ஓட்ட வரலாறாக இருந்தவை வம்சவரலாறுகளும் அரசுகளின் வரலாறுகளும்தான். இவை அவற்றுக்கிணையாக அல்லது மாற்றாக உணர்ச்சிகரமான ஒரு வரலாற்றை உருவாக்குகின்றன. விழுமியங்களையும் கனவுகளையும் உள்ளடக்கிய வரலாறு என இவற்றைச் சொல்லலாம்.

ஆகச்சிறந்த வரலாறுகள் அமைச்சர்களாலும் அறிஞர்களாலும் எழுதப்பட்டன. முதல் நாவல் என்று சொல்லப்படும் ஜெஞ்சியின் கதை தாசியால் எழுதப்பட்டது. இந்த வேறுபாடே போதும் என நினைக்கிறேன்.பின்னர் உரைநடையில் நாவல் எழுதப்பட்டபோது எங்கும் அதன் முதல் வடிவமாக இருந்தது ‘இன்னொரு வரலாற்றை சமைப்பது’ என்பதே. இந்த ஒற்றை வரியில் உலகப்பெருநாவல் மரபையே வரையறுக்க முடியும். வரலாற்றை புறவயமாகச் சொல்வது தல்ஸ்தோயின் பாணி. மனிதர்களின் அகம் வழியாக உணர்வுகளின் எண்ணங்களின் வழியாக மட்டுமே சொல்வது தஸ்தயேவ்ஸ்கியின் பாணி. இரண்டுமே உலகில் வலுவாக வேரூன்றின

ஆனால் உலகமெங்கும் சென்றுசேர்ந்தது இந்த பெருநாவல் மரபுதான். ஆகவே நாவல் உருவான ஆரம்பகாலகட்டத்தில் எல்லா மொழிகளிலும் நேரடியாக பெருநாவலுக்கான முயற்சிகளே உருவாயின. மலையாளத்தில் இந்துலேகா [சந்துமேனன்] மார்த்தாண்ட வர்மா [சி வி ராமன்பிள்ளை] கன்னடத்தில் சாந்தலா [கே.வி.அய்யர்] வங்காளத்தில் ஆனந்தமடம் [பங்கிம்சந்திரர்] கோரா [தாகூர்] குஜராத்தியில் ஜெயசோமநாத் [ கெ.எம் முன்ஷி] போன்றவை நினைவுக்கு வருகின்றன.ஆனால் தமிழில் இந்தப்பெருநாவல் மரபு பெரிய செல்வாக்கைச் செலுத்தவில்லை. சரியாகச் சொல்லப்போனால் பெருநாவல் மரபின் சில அம்சங்களை எடுத்து உருவாக்கப்பட்ட வணிக-கேளிக்கை எழுத்துமுறையே இங்கே வலுவான செல்வாக்கைச் செலுத்தியது. என் பார்வையில் இங்கே செல்வாக்கைச் செலுத்திய நாவல் என்பது ரெயினால்ட்ஸின் லண்டன் அரண்மனை ரகசியங்கள் எனற நாவல்தான்

அந்த வணிகக் கேளிக்கை எழுத்துக்கு எதிரானதாக இங்கே நாவல் உருவாகி வர மேலும் காலம்பிடித்தது. வலுவான தமிழ்நாவல்கள் நாற்பதுகளில்தான் உருவாகி வந்தன. ஆனால் அவை அடுத்தகட்ட நவீனத்துவ நாவல்களை முன்னுதாரணமாகக் கொண்டன

IMG_20160916_141250_1

பொதுவாக உலகப்போக்கு என ஒன்றை பொதுமைப்படுத்துவது இலக்கியத்தை புரிந்துகொள்வதற்கே என்பதை மீண்டும் வலியுறுத்த விழைகிறேன். இதை மிகச்சரியான வரலாறாகச் சொல்லமாட்டேன். இப்படி சிந்திக்கலாமே என்ற ஒரு சிபாரிசு மட்டுமே இது.

நவீனத்துவநாவல் என்பது பெருநாவல் மரபுக்கு எதிரான ஒரு போக்கு. அது பெருநாவல் மரபின் இரு அம்சங்களை நிராகரித்தது. 1. வரலாறு 2 புறவயமான யதார்த்தம் .

விளைவாக தனிமனிதனை மையமாக்கிய, அந்தரங்கத்தின் வெளிப்பாடாக மட்டுமே நிற்கக்கூடிய படைப்புக்கள் உருவாகி வந்தன. ‘தனிமனிதனின் அகம்’ என அவற்றை மிகப்பொதுப்படையாக வகுக்க முடியும்.ஓர் எல்லையில் காம்யூவின் அன்னியன் மறு எல்லையில் ஜாய்ஸின் யுலிஸஸ் ஆகியவை இந்த வகை எழுத்துமுறைக்கான உதாரணங்கள். காம்யூ எண்ணி எண்ணிச் சொல்லும் அகம் ஜாய்ஸால் மொழிப்பெருக்காக மாற்றப்பட்டிருக்கிறது.இந்தவகையான நவீனத்துவ எழுத்துமுறையே தமிழில் நாவலாக அறிமுகமாகியது. அதையொட்டிய நாவல்களிலேயே நாம் சாதனைகளை படைத்தோம். பொய்த்தேவு [க.நா.சு] தலைமுறைகள் [நீல பத்மநாபன்] ஒரு புளியமரத்தின் கதை [சுந்தர ராமசாமி] 18ஆவது அட்சக்கோடு [அசோகமித்திரன்] என நமக்கு ஒரு பட்டியல் உள்ளது.மலையாளத்தில் பெருநாவல் மரபு தகழியின் கயறுடன் முழுமைக்கு வந்தது. ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நவீனத்துவநாவலுக்கான தொடக்கமாக அமைந்தது.

கன்னடத்தில் மண்ணும் மனிதரும் [சிவராம காரந்த்] முழுமையடையச்செய்த பெருநாவல் மரபை அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நவீனத்துவநாவல் வடிவை நோக்கிக் கொண்டுவந்தது.மகத்தானபெருநாவல்களை உருவாக்கிய வங்க மரபு கணதேவதை, ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி, பாதேர் பாஞ்சாலி[விபூதிபூஷண் பந்தியோபாத்யாய], நீலகண்டப்பறவையைத் தேடி[அதீன் பந்த்யோபாத்யாய] அடுத்தகட்ட நகர்வை சீர்ஷேந்து முகோபாத்யாயவின் கறையான் வழியாக நிகழ்த்தியது.

இந்த வகை எழுத்துமுறை உலகமெங்கும் அடுத்தவகையான எழுத்துக்கு வழிவிட்டதை நான் உணர்ந்தேன்.இதை பின் நவீன நாவலாக பார்க்கலாம்.இதில் ஜோ டி குரூஸின் கொற்கை, ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம், எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை, எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், நெடுங்குருதி, இமையத்தின் செடல், கோணங்கியின் பாழி, பிதிரா, பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யுவன் சந்திரசேகரின் மணல்கேணி, வெளியேற்றம், பகடையாட்டம் போன்ற நாவல்களுக்கெல்லாம் ஏதேனும் பொதுக்கூறை கண்டுபிடிக்கமுடியும் என்றால் இதுதான். அவை தனிமனிதனின் உலகை வரலாற்றில் வைத்து விரிக்கின்றன. மாற்று வரலாறாக ஆகின்றன. வரலாற்றைக்கொண்டு விளையாடுகின்றன.அவ்வகையில் சமீபத்தில் வந்த பலநாவல்களை குறிப்பாகச் சுட்ட முடியும். பூமணியின் அஞ்ஞாடி ஒரு நிகர்வரலாற்றை உருவாக்குகிறது. சொ தருமனின் கூகையில் கூடவே ஒரு மெல்லிய பகடியும் ஓடிச்செல்கிறது.முருகவேளின் மிளிர்கல் உண்மையான வரலாற்றை தொன்மமாக ஆக்க முயல்கிறது. கௌதம் சன்னாவின் சமீபத்திய நாவலான குறத்தியாறு நாட்டார் தொன்மத்தைக்கொண்டு ஒரு வரலாற்றை உருவாக்க முயல்கிறது.

இதையொட்டித்தான் இலக்கியத்தின் வரலாற்று மதிப்பு என்ன என்ற வினா எழுகிறது. தங்கள் வரலாற்றை எழுத்தாளன் திரித்து எழுதுகிறான் என்று மக்கள் தெருவுக்கு இறங்குகிறார்கள்.நாவல் என்பதே ஒரு வகையில் திரிக்கப்பட்ட வரலாறுதான். ஆசிரியனின் பார்வைக்கு ஏற்ப, அவனுடைய இலக்குக்கு ஏற்ப அதை மாற்றியமைப்பதே கலை எனப்படுகிறது. சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றார்.தமிழில் மைக்ரோ நாவல் என்ற ஒரு ஜெனர்/வகைமை உருவாகியுள்ளது.இந்த வகையில் முக்கிய நாவலாக புது எழுத்து வெளியிட்ட மகாகிரந்தம் மிக முக்கியமானது.குறுநாவலுக்கும் மைக்ரோ நாவலுக்கும் வித்தியாசம் உள்ளது.இதை மகாகிரந்தம் நாவலை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

@@@@@@@

 

 

Leave a response and help improve reader response. All your responses matter, so say whatever you want. But please refrain from spamming and shameless plugs, as well as excessive use of vulgar language.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s