மழைக் கவிதைகள்
மழையோடு பேசுங்கள்
அதன் ஒவ்வொரு
தாளத்திலும்
பிடிபடாத ஒரு சொல்
நனைந்தே செல்கிறது.
0
கவனமாக இருங்கள்
மழையோடு பேசும் போது
மழை வந்தாலும்
வந்து விடலாம்
0
மழை வரும் போது
மழையோடு பேசுவதே
நன்று என்கிறீர்களா
அப்படி தான் இருந்து
விட்டு போங்களேன்.
0
மழை பெய்தால் போதும்
விட்டில்கள் வந்து விடுகின்றன
வண்டுகளும் பூச்சிகளும்
வந்து விடுகின்றன
என்றாலும்
இதையெல்லாம் சொல்லாமல்
வெறுமனே
இரண்டு வரி
மழையைப் பற்றி
சொல்லவும் இயலுமோ?
0
மழைநீர் அருவியாய்
வீழ்கிறது
இப்போதெல்லாம்
மழையில் இறங்கி
குளிக்காமல் போன
மனம் வாய்த்ததேன்?
0
நேற்று பெய்த மழையில்
வீட்டின் கூரை
பெயர்ந்து போனது
வீடு நல்ல வெளிச்சமாச்சு
மனசு மெல்ல குளமாச்சு
0
மழை பெய்தால் போதும்
வீட்டில் பல இடங்களிலும்
தண்ணீர் தேங்கி விடுகிறது
மழை மீது புகார் சொல்ல
இயலாத என்னிலும்
உண்டோ கவனபிழைகள்?
மழையோடு பேசுதல்
மழை விடாமல்
பெய்து கொண்டிருக்கிறது
வீட்டின் கூரையோடுகள்
பல காலத்தால் பழமையானவை
உத்தரத்தில் செதில் பிடித்தாயிற்று
சுவர்கள் நனைந்து
மழைநீர் வழிகிறது
ஒவ்வொரு மழையும்
அச்சத்தையோ
தவிப்பையோ
தான் எழுதிச் செல்லுமோ?
0
இன்றொரு மழை மரங்களை
குளிப்பாட்டிச் சென்றது
செடிகளை நனைத்து
புற்களை ஈரப்படுத்தி
ஆனைந்தத்தையோ
அளவிலாத கருணையையோ
பொழிந்ததன்றோ
இலைகளின் தூய்மை
பூக்களின் பளிசான எடுப்பு
கொம்புகளில் புதுவண்ணம்
கழுவிச் செல்லவும்
உலர செய்யவுமான
மழைத்தாய் தாலாட்டோ தென்றல்
மின்விசிறியில் சுழலும் கவிதைகள்
எனக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும்
மின் விசிறி எழுதும்
பேப்பர் பக்கங்களை
எப்போதும்
கலைத்துக்கொண்டிருக்கிறது
எனது எழுத்தையும்
0
மின் விசிறியின் கீழே
அமர்ந்து எழுதுவதென்பது
அவ்வளவு எளிதானதல்ல
என்றபோதும்
அதன் ஓட்டத்தை நிறுத்த
எனக்கில்லை மனது
0
படுத்து கொண்டு மேலே
தொங்கும் மின்விசிறியை
பார்க்கும் போது
ஒன்றுமே
தோன்றுவதில்லை என்ற
குறையை தவிர
அதன் விசிறிகள் சுழல சுழல
தூக்கம் பீறிட்டு கொண்டு
வருவதென்பது உண்மைதான்
0
மின் விசிறியின்
காற்றில் அதிர்ந்தன
புத்தகத்தின் பக்கங்கள்
ஒரு பக்கத்தை
இன்னொரு பக்கம்
வாசிக்கிறது
0
மின்விசிறியின்
சப்தம் நின்றுபோகுமோ
என்ற கவலை கொள்ளாது
இருக்கமுடிவதில்லை
அதன் இதயம்
கனன்றவாறு
சுழல்கிறது
0
உனது சுற்றலில்
தேடல் என்றொரு சொல்
இல்லாதிருந்தாலும்
இயக்கம் இல்லாமல்
எதுவும் உண்டோ
என்று சொல்லி தான்
சுற்றேன்.
மேலும் சில கவிதைகள்
பனித்துளிகளைப் பற்றி
யாரும் அபிப்பிராய
பேதம் கொள்வதில்லை
அதிகாலையின் சங்கமத்தில்
இலையின் நுனியை எட்டி
விடுதலை பெற
எத்தனித்தது ஒரு துளி
விழுந்தது
விடுதலை பெற்றது
இலையா?
பனித்துளியா?
—
2
விழும் நீர் பெருக்கே
நீ ஒரு செயல்வீரம்
எனினும் ஏன்
உன்னிடமும் அடக்குமுறை?
தரையில் சொட்டும்
பைப் தண்ணீரிலும்
கூட பறக்க
எத்தனிக்கிறது
பறவைக் கூட்டம் ஒன்று
—
3
நடக்கவும் முடியவில்லை
குனியவும் முடியவில்லை
பட்டாம் பூச்சி ஒன்று
தற்செயலாய்
காலில் அமர்ந்த போது
மற்றபடி
பட்டாம் பூச்சியைப் பற்றி
நினைக்க சமயமேது?
—
4
மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
எதையெல்லாமோ
அடித்துச் செல்லுகிறது
எதையெல்லாம்
அடித்துச் செல்லுகிறது
என்று ஒரு முறையாவது
கவனித்திருக்க வேண்டும்
நானோ?
மழையோ?
—–
5
கிணற்றடியில்
வாளியை
வைக்க முடியவில்லை
உடனே புளியம்பூ
உதிர்ந்து வாளிக்குள்
விழுந்து விடுகிறது
காற்று அடித்துச் செல்லும்
புளியம்பூக்களைக் குறித்தோ
கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும்
புளியம்பூக்களைக் குறித்தோ
அல்லது
முற்றம் முழுக்க விரவிக்கிடக்கும்
புளியம்பூக்களை குறித்தோ
கவனிப்பற்றுப் போகிறது
மனசு.